காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அறிவிப்போம். மேலும், இது தொடர்பாக சிறையில் இருந்த சிலரை விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெற்ற “நல்லிணக்கத்துக்கான மதங்கள்” தேசிய சர்வமத மாநாட்டில் உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரவிக்கையில்,
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதே இப்போதுள்ள பிரதான கேள்வியாகும்.இதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) அமைப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பல அறிக்கைகள் உள்ளன. அவை தொடர்பில் ஆராய்ந்து நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸிடமிருந்து தனியொரு அறிக்கை பெறப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க அதிபரின் ஆதரவு
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வரைவை நாங்கள் நிறைவேற்றிய பின்னர், தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசா இந்த வேலைத் திட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.
ஏனைய நாடுகளிடமிருந்தும் அதற்கான உதவிகள் கிடைக்கின்றன. அதற்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.