நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொட்டித்தீர்த்த கடும் மழையால் பாதைகள் துண்டிக்கப்பட்ட யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பிரதேசத்தின் அக்காச்சி எழுச்சிக்குடியிருப்பை (பொக்கணை) சேர்ந்த சுமார் 70 குடும்பங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அப்பகுதி மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளது. இதனால் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் என கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராம மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான தியாகராசா நிரோசின் ஊடாக, உடுப்பிட்டி சொர்ண வைரவர் ஆலய நிர்வாகத்தினரின் நிதி உதவியுடன் குறித்த மக்களுக்கான மதிய உணவு வழங்கும் செயற்பாடு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்தில் மதியஉணவு சமைக்கப்பட்டு கொண்டு போய் நேரடியாகவே மக்களுக்கு பரிமாறப்பட்டது.
தேவாலயங்கள், மசூதிகள், விகாரைகள் போன்ற மத நிறுவனங்களிடம் இடர்காலத்தில் மக்களுக்கு உதவுவது தொடர்பிலான உடனடி ஏற்பாடுகள் உள்ளன.
ஆனால் எமது சைவ ஆலயங்களில் பரிபாலன சபைகள், அறங்காவலர் சபைகள் இருந்தும் தனது பிரதேச மக்களுக்கு உதவுவது தொடர்பிலான அக்கறையும் ஆர்வமும் பெரும்பாலும் இல்லை.
இந்நிலையில் இடர்காலங்களில் மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படும் இவ்வாலயத்தை போல ஏனைய ஆலயங்களும் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.