ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது யுத்த காலப் பகுதியில் அதிகமான ஊடகவியலாளர்கள் ஜனவரி மாதத்தில் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள் எனவே அவர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் அடுத்த மாதத்தில் இடம் பெறவுள்ளன.
எனவே அவர்களுக்கான நீதி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல சிங்கள முஸ்லிம் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக நாம் கடந்த காலங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம். ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் நிபந்தனைகள் இன்றி செயற்படும். கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடக்கம் படுகொலை செய்யப்பட்ட சகல ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. நான் முன்னரும் ஊடக சந்திப்புகளின் போது இது தொடர்பாகத் தெளிவுபடுத்தியிருந்தேன்.
இந்த விசாரணைகள் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டிருந்தன. அதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் சேவையிலிருந்து இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்திய நிலை காணப்பட்டது.
மேலும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பான படுகொலைகள் மட்டுமல்ல ஊழல் தொடர்பான சகல விடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டவர்கள் கூட நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
நாம் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக தேடிப் பார்த்தபோது பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் போன்றவற்றின் அறிக்கைகளின் பிரகாரம் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்பான ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.
அதனால் நாம் அந்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து முறையாக மேற்கொண்டு வருகிறோம். ஊடக வியலாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றன என எனக்கு உறுதியாக கூற முடியும்.
அத்துடன் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல் எதுவும் எதிர்காலத்திலோ எமது எமது அரசாங்கத்திலோ இடம்பெறாது என எனக்கு தனக்கு உறுதியாக கூற முடியும் என அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.