நாடு முழுவதிம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துக்கள் நேற்றைய தினம் (18) இடம்பெற்றன.
மஹவ பொலிஸ் பிரிவின் நிகவெரடிய – சியம்பலங்கமுவ வீதியில் தலகொலவெவ பஸ் நிறுத்தத்திற்கு அருகில், மஹவவிலிருந்து நிகவெரடிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியின் இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் பயணித்த பெண் பலத்த காயமடைந்தனர். மேலும் இருவரும் மஹவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 22 மற்றும் 31 வயதுடைய இபலோகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மின்னேரியா பொலிஸ் பிரிவின் ஹபரணை-பொலன்னறுவை வீதியில் மின்னேரியா இராணுவ முகாமுக்கு அருகில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபரணையிலிருந்து மின்னேரியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் இருந்து வந்த இராணுவ கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து ஹிங்குரக்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தியபெதும பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.