சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி, 16 கோடியே 41 இலட்சம் ரூபாவுக்கு மேல் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையாக பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சந்தன வீரகுமார எனப்படும் சக்வித்தி ரணசிங்க மற்றும் அவரது மனைவி குமாரி அனுராதினி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது.
பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே, ஒவ்வொரு பிரதிவாதிக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதற்கு மேலதிகமாக பிரதிவாதிகளுக்கு எதிராக தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்திய பின்னர் பிரதிவாதிகளின் கைரேகையை பதிவு செய்துவிட்டு, அவர்களை விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிரதிவாதி தரப்பினருக்கும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரதிவாதி வைப்புத்தொகையாக மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மொத்தத் தொகையில் 60 சதவீதத்தை, 2023 ஜூலை முதல் தலா 50 இலட்சம் ரூபா என்ற மாதாந்த தவணைகளில் செலுத்திவிட்டதாக அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன் பின்னர், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, இந்த வழக்கின் முதல் பிரதிவாதி சுமார் ஒன்பது வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது பிரதிவாதி சுமார் இரண்டு வருடங்களாக சிறையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் மேலதிக கல்வி வகுப்புகளை நடத்தி அதனூடாக பெறப்பட்ட பணத்தில் இந்தக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
பிரதிவாதிகள் இருவரின் பிள்ளைகளும் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதால், அவர்களுக்கும் மென்மையான தண்டனைகளை விதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பின்னர் இந்த முடிவை அறிவித்தார்.