இலங்கையில் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்துக்கு 136 பில்லியன் ரூபாய் வறுமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருமானம் பெறுமதி சேர் வரி (VAT), சுங்க வரி மற்றும் ஆடம்பர வரி ஆகியவற்றிலிருந்து ஈட்டப்பட்டவைகளாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற பொது நிதிக் குழுவின் (COPF) கூட்டத்தின் போது, இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட திறைசேரி பிரதிச் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன, 2025 ஆம் ஆண்டில் இதுவரை வாகன இறக்குமதிக்காக 596 கடன் கடிதங்கள் (LCs) திறக்கப்பட்டுள்ளதாகவும், 272 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்காக செலவிடப்படும் ஒவ்வொரு டொலருக்கு எதிர்பார்க்கப்படும் 1.5 டொலருடன் ஒப்பிடும்போது அரசாங்கம் தற்போது 1.7 டொலர் வருமானத்தை ஈட்டுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி விசேட பயன்பாடுகளுக்கு வாகனங்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. அதேவேளை, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தனிநபர் பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடையை நீக்கியது.
அதிளவான வாகன இறக்குமதிகளைத் தடுக்கவும், அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கவும் அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















