நுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் சமவெளியில் அமைந்துள்ள ‘உலக முடிவு’ சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரண்டு நடைபாதைகளை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடைபாதைகள் பார்வையாளர்களுக்கு மிகவும் அற்புதமான இயற்கை காட்சிகளை தர உள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நோன்பரீல் தேயிலைத் தோட்டம் ஊடாக ஒரு நடை பாதையும், கத்பொத்துதென்ன (Gathpothutenna) ஊடாக இஹல கலகம வீதியில் மற்றுமொரு நடைபாதையும் அமைக்க கடந்த வாரம் இம்புல்பே பிரதேச செயலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் சூரதலி மற்றும் பஹந்துவ நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஹிரிகட்டு ஓயா மற்றும் சமனல குளம் ஆகியவற்றுக்கு பிரசித்தி பெற்றவைகளாகும். சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் அதிகாரிகளுடன் பெலிஹுல் ஆற்றை சுற்றுலா தலமாக மேலும் அபிவிருத்தி செய்வதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நோன்பரீல் பகுதி மற்றும் பிற இடங்களை அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டுள்ளனர். தேயிலை உற்பத்தியை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருந்த பிரித்தானியர்கள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஓஹிய ஊடாக பெலிஹுல் ஆற்றுக்கு சென்றதன் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தை இணைத்ததாக சான்றுகள் உள்ளன.
1805 ஆம் ஆண்டு ஆளுநர் ஃபெட்ரிக் நோர்த், நோன்பரீல் தோட்டத்திற்குச் சென்று பெஹ்லிஹுல் ஆறு அமைந்துள்ள பகுதியில் தங்கியிருந்துள்ளார். 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் உலக முடிவை இணைக்கும் 15 அடி வீதியை வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, புதிய வர்த்தமானி தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பெலிஹுல் ஆறு அமைந்துள்ள பகுதியிலுள்ள ஓய்வு விடுதியை கடந்து செல்லும் உலக முடிவுக்கான நான்கு கிலோமீட்டர் நடை பாதை பல ஆண்டுகளுக்கு முன்பு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தால் மூடப்பட்டது.
இந்த நடை பாதையை மீண்டும் திறப்பது பெலிஹுல் ஆற்றுப் பகுதி சுற்றுலாவை ஊக்குவிக்கும் என அதிகாரிகள் தற்போது நம்புகின்றனர். இம்புல்பே பிரதேச ஒருங்கிணைப்புக் குழு பெலிஹுல் ஆறு அமைந்துள்ள பகுதியை சுற்றுலாப் பகுதியாக அபிவிருத்தி செய்ய முன்மொழிந்துள்ளது.
ஆண்டுதோறும் 50 இலட்சம் உள்ளூர் மட்டும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உலக முடிவுப் பகுதியைப் பார்வையிட வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்டம் ஊடாக மூன்று பாதைகளைப் பயன்படுத்துகின்றனர்.
2021 ஆம் ஆண்டிலும் இந்தப் பாதைகளைத் திறப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் ஹோர்டன் சமவெளி 3,000 ஹெக்டயர்களுக்கு மேல் பரந்து விரிந்திருப்பதாலும், நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தாலும் வனவளத் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதி என்று கூறி சுற்றுச்சூழல் குழுக்கள் ஏற்கனவே இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளன.