யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இன்றைய (01) நடவடிக்கைகளின்போது, புதிதாக 4 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
அதோடு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளில் 7 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில், மொத்தமாக 47 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை 122 எலும்புக் கூட்டுத் தொகுதிகள்
செம்மணி பகுதியில், “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல-01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல-02” என யாழ் நீதவான் நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 45 நாட்கள் நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று 27ஆவது நாளாக அகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி, கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



















