அதானி நிறுவனத்தலைவர் கௌதம் அதானி தனது குழுமத்தின் மிகவும் முக்கிய நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் நிர்வாகப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அவரது மூத்த மகன் கரண் அதானி (38) ஏற்கனவே துறைமுக நடவடிக்கைகளை நிர்வகித்து வருகிறார்.
இந்த பதவி விலகலை தொடர்ந்து, கௌதம் அதானி இப்போது அம்புஜா சிமென்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி கிரீன் சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி இன்ஃப்ரா (இந்தியா) உள்ளிட்ட ஏழு குழும நிறுவனங்களின் நிர்வாகமற்ற தலைவராக மாறியுள்ளார்.
விமான நிலையங்கள், தரவு மையங்கள் மற்றும் செப்பு உலோகங்கள் போன்ற புதிய வணிகங்களின் காப்பகமாக அறியப்படும் அதானி எண்டர்பிரைசஸ் என்ற ஒரே ஒரு நிறுவனத்திற்கு மாத்திரமே கௌதம் அதானி தற்போது நிர்வாகத் தலைவராக அவர் இருக்கிறார்.
இந்த மாற்றம் நிறுவனங்கள் சட்டத்தின் (பிரிவு 203, துணைப் பிரிவு 3) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு முக்கிய நிர்வாக நபர் (KMP) அல்லது ஒரு முழுநேர பணிப்பாளர் (WTD) ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகிப்பதைத் தடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.




















