இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் 17ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகளில் ‘A’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகளும், ‘B’ பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் அதிக வெப்பம் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய போட்டிகளின் நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் போட்டிகளை இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை நேரப்படி இரவு 7:30க்கு குறித்த போட்டிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், அதிகப்படியான வெப்பம் காரணமாக, வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 19 போட்டிகள் கொண்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டி மட்டுமே நேர மாற்றம் இல்லாமல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















