சிற்றூந்தின் முன்பக்க கண்ணாடிகளில் காட்சிப்படுத்தப்படும் பெயர்ப் பலகைகள் மற்றும் பதவிகள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்தின் பிரகாரம் சிற்றூந்தின் முன்பக்க கண்ணாடியில் பெயர்ப்பலகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது என காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
சிற்றூந்தின் முன்பக்க கண்ணாடியை ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே கருமையாக்க அனுமதி உள்ளதாகவும், அதுவும் கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் கருப்பு நிறமாக்க அனுமதிக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், வாகன வரி வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் இலக்கத் தகடுடன் வழங்கப்பட்ட ஸ்டிக்கர் ஆகியவற்றை மாத்திரமே கண்ணாடியில் காட்சிப்படுத்த முடியும் என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.



















