அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை திங்கட்கிழமை (22) அதிகாலை வேளையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் முற்றுகையிட்டனர்.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, நீண்ட காலமாக இளைஞர்களை இலக்குவைத்து சூட்சுமமான முறையில் வியாபாரம் செய்துவந்தவரை கைது செய்துள்ளனர்.
வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர், கல்லரிச்சல் 04 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர், சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2321 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஒரு தொகை பணம், கையடக்கத் தொலைபேசி (03), Power bank (03), வங்கி அட்டை (03) என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சான்றுப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவர், முன்னதாக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாகி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















