உலகம் முழுவதும் இதய நோய்களால் ஏற்படும் மரணங்களில் 80 சதவீதம் தவிர்க்கப்படக்கூடியவை என்பது வருத்தத்திற்குரிய விடயம் என இதய நோய் நிபுணர் வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர், வைத்தியர் நிபுணர் சம்பத் விதானவசம் தெரிவித்தார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உலக இதய தினத்தின் முக்கிய நோக்கம், தவிர்க்கப்படக்கூடிய இதய மரணங்களைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது என அவர் அங்கு வலியுறுத்தினார்.
எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இதய நோய்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உடற்பயிற்சி, நல்ல உணவு முறைகள், புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்ப்பது மற்றும் தவறாமல் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் இதற்கு முக்கியமானவை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வைத்தியர் நிபுணர் சம்பத் விதானவசம்,
“இதய நோயை எவ்வாறு கண்டறிவது, இதய நோயின் அறிகுறிகள் என்ன, இதய நோய் ஏற்பட்டால் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அறிந்திருப்பது வைத்திய நிபுணர்களின் பொறுப்பு மட்டுமல்ல, இது அனைத்து மக்களும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விடயம்.
நீங்கள் இது பற்றி அறிந்திருந்தால், உடனடியாக செயற்பட்டால், வைத்தியர்களும், செவிலியர்களும் உங்களுக்காக செய்யக்கூடியவை பல உள்ளன.
நம் இதயத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு.
உலக இதய தினம் செப்டம்பர் 29 ஆம் திகதி ஆகும். இதனுடன் இணைந்து, இலங்கை இதய நோய் நிபுணர் வைத்தியர்களின் நிறுவனம் ஒரு நடைபயணத்தையும், மக்களை விழிப்புணர்வு செய்யும் நிகழ்வையும் ஏற்பாடு செய்தது.
இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘ஒவ்வொரு இதயத் துடிப்பும் முக்கியம்’ என்பதாக அமைந்துள்ளது.
எந்த இதயத் துடிப்பும் அகாலத்தில் நின்றுவிடக் கூடாது என்பதே இதன் செய்தி. இது இலங்கையர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான இதயத்துடன் தங்கள் வாழ்நாளை வாழ ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.” என்றார்.




















