முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவுகளை பொலிஸாருக்கு வழங்கியவர் கௌரவிக்கப்படவுள்ளார்.
முச்சக்கர வண்டியில் தவறவிடப்பட்ட குரல் பதிவுகளை பொலிஸாரிடம் ஒப்படைத்த குறித்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
முச்சக்கர வண்டி சங்கத்தினால் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கை சுயத்தொழில் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் ஆலோசனை பெற்று, குறித்த முச்சக்கரவண்டி சாரதிக்கு பரிசை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் உள்ள தவறான எண்ணங்கள் இந்த சாரதி ஊடாக குறைவடைந்துள்ளதாகவும், நாட்டில் மறைந்திருந்த சட்டவிரோத செயற்பாடுகள் வெளியே தெரியவந்து இன்று உண்மை வென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பயணியினால் மறந்து விட்டு செல்லப்பட்ட குரல் பதிவு தொகையை பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரதி, பொலிஸாரின் ஆலோசனை பெற்றுக் கொண்டு தங்கள் சங்கிற்கு வருவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.