முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளைவான் சாரதிகள் என ஊடக சந்திப்பை நடத்திய இருவர் விவகாரம் குறித்த விசாரணைகளில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் திட்வட்டமாக தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் அமைச்சர் ராஜிதவின் ஊடக சந்திப்பில் இருவர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர். அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் சமர்பிக்கப்பட்ட பீ அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுக்களின் இடையே குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவுகளுக்கு அமையவே முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
பிணை வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு முடிந்ததாக கருதக்கூடாது. படுகொலை வழக்கு ஒன்றிலும் விசாரணைக்கு ஒருகாலம் செல்வதற்கான காலம் ஒன்று உள்ளது. ஆகவே தற்போது இந்த வழக்கிலும் விசாரணை காலமே இடம்பெறுகின்றது.
கடந்த கால அரசாங்கத்தின்போது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் பல வழக்குகள் விசாரணை முடிந்த பின் முடிவுறுத்தப்பட்டது. சாட்சியங்களைத் தயாரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் முடியாமற்போனதால் வழக்குகள் முடிவுறுத்தப்பட்டன.
இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு வாக்குமூலம் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் புதிய அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
ஆனால் கடந்த காலத்தில் அப்படியல்ல, பல்வேறு தலையீடுகள் சுயாதீன விசாரணையில் இடம்பெற்றிருப்பதை அப்போதைய ஊழல் மோசடி தடுப்பு ஆணைக்குழு முன்னாள் தலைவர்கூட கூறியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.