தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன் மூலம்,வைரஸ் நோய் தொற்றுக்கள் பலவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என ரிட்ஜ்வே மருத்துவமனையின் சுவாச நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது பரவி வரும் வைரஸ்கள், கோவிட் வைரஸ் குழுக்களா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகள் மேற்கொள்ளப்படாததால் அதனை சரியாக கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தப் பரிசோதனை
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாராசிட்டமோல் தவிர மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காய்ச்சல் இருக்கும் போது சிறுவர்கள் சாப்பிட மறுப்பதால், அவர்களுக்கு முடிந்தளவு திரவத்தை கொடுக்க வேண்டும், இல்லையெனில் கடுமையான நீரிழப்பு நிலைமைகள் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சுவாச நோயாளிகள்
குறிப்பாக இந்நாட்களில் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் 50 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதோடு அனைத்து அறைகளும் சுவாச நோயாளிகள் மற்றும் காய்ச்சலினால் நிரம்பி வழிகின்றன.
இதனால் பண்டிகை காலத்தில் சிறுவர்ளையும் குழந்தைகளையும் நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை முடிந்தவரை குறைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் விடுமுறை நாட்களில் பிள்ளைகளை முடிந்தவரை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.