நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான நிதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசால் வழங்கப்பட்ட வீட்டுதிட்ட செயற்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக எமது செய்தியாளர் அவரை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்புடைய அமைச்சருடன் இடம்பெற்று வருகிறது. உண்மையில் கடந்த அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் இல்லாத செயற்பாடுகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.
இருந்த வீட்டினையும் உடைத்து தற்போது மழை வந்தால் கூட ஒதுங்க முடியாத நிலையில் உள்ளனர். தேர்தலில் வாக்கு பெறுவதற்காக இந்த விடயத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனினும் அரசாங்கம் என்ற வகையில் அவர்களிற்கான நிதிகளை விரைவாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
வன்னி மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரச்சனைகளை வரவுசெலவு திட்டத்திற்குள் சமர்ப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். எமது பகுதிகளில் உள்ள தேவைப்பாடுகள் எண்ணில் அடங்காதவையாக இருக்கிறது. அவற்றில் எவ்வளவிற்கு பூர்த்தி செய்ய முடியுமோ அதனை இந்த அரசினூடாக பூர்த்தி செய்வதற்கு முயற்சி செய்து வருகிறேன்.
குறிப்பாக புனர்வாழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களது வாழ்வாதாரம் மிகவும் கீழிறங்கியுள்ளது. அவர்களிற்கு வரையறையில்லாத வகையிலும் யாரிடமும் எதிர்பார்காத வகையிலுமான ஒரு நிலமையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.