யாழ்ப்பாணம் மாநகரசபை அமர்வுகளில் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் யாழ். மாநகரசபையில் உறுப்பினர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பில் எமது செய்தியாளர் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாநகரசபையின் அமர்வுகளில் தேவையற்ற விடயங்கள் ஆராயப்படுகின்றதே தவிர மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்படுவதில்லை.
சபையில் அண்மையில் நடந்த அமர்வின்போது குலம், கோத்திரம் பற்றி பேசி உறுப்பினர்கள் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இவை தவிர்க்கப்பட வேண்டியவை. சபையில் பேசப்பட வேண்டிய எவ்வளவோ விடயங்கள் உள்ளன.
மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பாக திண்மக்கழிவு அகற்றல் தொடர்பில் தீர்க்கமான, காத்திரமான தீர்மானம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அது அவ்வாறிருக்க சபை அமர்வுகளில் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.
எனவே யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் இல்லை எனில் மக்கள் தான் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.