ஹன்வெல்ல தும்மோதர கொடிகந்த ஆரண்ய சேனாசனத்தில் இருந்து கடத்தப்பட்ட பௌத்த துறவியின் சடலம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
உடுவில தம்மசிறி தேரர் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
கொட்டதெனியாவ, மீரிகம பொது கல்லறையில் ஒரு சடலம் தகனம் செய்யப்பட்டதாக கொட்டடெனியாவ பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று (4) மாலை பொலிசார் சடலத்தை கண்டுபிடித்தனர்.
காதுகள், வாய் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்த காயங்களுடன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. முகம் மோசமாக எரிந்து காணப்பட்டது.
கடந்த 3ஆம் திகதி 11.30 மணியளவில் இரவு சுமார் 10 பேர் கொண்ட குழுவொன்று ஆரண்ய சேனாசனத்தில் நுழைந்து, தேரரை கடுமையாக தாக்கி வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
ஆரண்ய சேனாசனத்தில் உள்ள 15 வயதான இளைய பிக்கு ஒருவர் தொடர்புபட்ட விவகாரத்தினால் இந்த கொலை நடந்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஹொரண பகுதியை சேர்ந்த அந்த பிக்கு அந்த மடாலயத்தில் அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அது குறித்த இரகசிய புகைப்படங்கள் அவரது தாயாருக்கு வழங்கப்பட்டதையடுத்து, கூலிப்படையை வைத்து இந்த கொலையை அந்த தாயாரே நடத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.
தேரரை கடத்தவதற்காக வந்தவர்களுடன் இளைய பிக்குவின் தாயாரும் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் உள்ளிட்ட குழுவினர் தலைமறைவாகி விட்டனர்.
15வயது பிக்குவின் தந்தை ஹன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவருக்கு சம்பவத்துடன் தொடர்பில்லையென பொலிசார் தெரவித்தனர்.