மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்குவது பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனமானது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் நேற்று (08.04.2024) விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட பேச்சுவார்த்தை
இதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் பற்றி பிரதிநிதிகளிடம் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான சட்ட ஆலோசகர், உப தலைவரும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.