இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையை நினைத்து மிகவும் கவலையடைகின்றேன். ராஜபக்சக்களின் கைகளில் மீண்டும் நாடு சிக்கியுள்ளது. இவர்கள் ஆட்சியைத் தக்கவைக்க எதையும் தயக்கமின்றிச் செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் படுகொலைகள் ஆகிய குற்றங்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தே 2015ம் ஆண்டில் ஆட்சிப்பீடம் ஏறியது ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய அரசு.
ஆனால், அந்தத் தேசிய அரசு மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தவில்லை. அவர்களுக்கு எதிராக சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
அதேவேளை, தேசிய அரசின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் ஒரே பாதையில் பயணிக்காமல் வெவ்வேறு பாதைகளில் பயணித்தார்கள். இதனால் கூட்டு அரசு ஆட்டம் கண்டது.
தேசிய அரசின் அசமந்தப்போக்கை நாட்டு மக்கள் கண்டித்தார்கள். தேசிய அரசின் நடவடிக்கை தொடர்பில் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் அந்த அரசை ஆட்சிப்பீடம் ஏற்றிய சிவில் அமைப்புகளும் கடும் அதிருப்தி அடைந்து மைத்திரி, ரணிலை பகிரங்கமாக விமர்சித்து வந்தன.
இது ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் இருந்த ஒற்றுமையைச் சிதறடித்தது. அவ்வாறான நிலைமை ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.