ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை கூறி மோசடி செய்த நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா வீரகுல பிரதேசத்தில் வைத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், ஜனாதிபதி கோத்தாபயவின் கீழ் சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் என போலியான முறையில் தன்னை அறிமுகப்படுத்திகொண்டு, ஜேர்மனியில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி, நபரொருவரிடம் 24ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், குறித்த சந்தேகநபர் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், கடந்த டிசெம்பர் மாதம் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தார் எனவும், அவருடைய வங்கிக் கணக்கில் குறித்த தொகை வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணத்தை கொடுத்த முறைப்பாட்டார் தொலைபேசியை அழைப்பை ஏற்படுத்தும் போது, தான் ஜனாதிபதியுடன் இருக்கின்றேன் எனவும் பலமுறை கூறியுள்ளார்.
இதன் காரணமாக சந்தேகம் கொண்ட அந்த நபர், இது தொடர்பில் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.