நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்படவுள்ள 21ஆம், 22ஆம் திருத்த சட்டமூலம் சிறுபான்மை கட்சிகளை பொருத்தவரையில் ஏற்புடையதாக இல்லை என அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு நாங்கள் எங்களுடைய முழுமையான எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இது ஒரு தனி நபர் பிரேரணையாக இருந்தாலும் கூட இவ்வாறான பிரேரணைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், சிறுபான்மை மக்களை பொருத்தளவில் அவர்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் சிறுபான்மை கட்சிகளுடைய எதிர்பார்ப்பாகும்.
எங்களுடைய பிரச்சினைகளை முக்கியமாக பேசக்கூடிய இடமாக இருப்பது நாடாளுமன்றம். எனவே நாடாளுமன்றத்தில் எங்களுடைய அங்கத்துவத்தை பாதிக்கின்ற வகையில் கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டமூலமாக இருந்தாலும், அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஏனென்றால், எங்களை பொருத்தமட்டில் கடந்த காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சிறுபான்மை கட்சிகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களாகவும் இருந்தாலும் சரி, தங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாக பல முக்கியமான விடயங்களை சாதித்திருக்கின்றார்கள்.
குறிப்பாக எங்களை பொருத்தவரையில் மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த காலங்களில் பல்வேறு விடயங்களை சாதித்திருக்கின்றது.
எனவே, இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது எங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம். நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகின்ற பொழுது அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த இரண்டு சட்ட மூலங்களும் எங்களுடைய சிறுபான்மை மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே இருந்த சட்டமூலத்தின் படி 5 வீத மூலமான வாக்குகள் பெற்றுக்கொண்டால் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை இன்று அது 12.5 வீதமாக அதிகரிக்கப்படுகின்றமையானது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, எந்த காரணம் கொண்டும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் ஜனாதிபதியுடைய நேற்றைய உரையின் போது, அவர் தெரிவித்திருந்த கருத்து கூட சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகின்ற பொழுது சிறுபான்மை கட்சிகள் அனைவரோடும் கலந்தாலோசித்து அவர்களை பாதிக்காத வகையில் இந்த சட்டமூலங்கள் கொண்டு வரப்படுமாக இருந்தால் அதற்கு ஆதரவாக நாங்கள் எங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
பெ.சந்திரசேகரனின் புதல்வியான அனுஷா எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஊடகவியாலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மூவர் மாத்திரமே போட்டியிடலாம். எனவே அனுஷா சந்திரசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை.
அவர் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் அது அவரின் உரிமை. கட்சியில் இருக்கலாம். வெளியில் செல்லலாம். யாருக்கும் தடை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.