ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பு சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படாத பட்சத்தில், எதிர்வரும் தேர்தலில் அவரின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய கூட்டணிக்கு, தமது ஆதரவை வழங்குவதாக, ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள ஏனைய கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவது குறித்து, கடந்த 3ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, தலதா அத்துக்கோரல, மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடலுக்கு முன்னர், ஐக்கிய தேசிய முன்ணியின் ஏனைய தலைவர்களுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் கூறியுள்ளார்.
இதற்கமைய, இந்த சந்திப்பில், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோகணேசன், திகாம்பரம் மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.