ஈரான் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை குறித்து அதிக கரிசனைகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் பிராந்தியத்தில் நிதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும், ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிக்கவும் இலங்கை அரசு கோரியுள்ளது.
இதேவேளை, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து, அண்டை நாடான ஈரானின் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இராணுவத் தளபதியின் படுகொலைக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளது. எனினும், ஈரானின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.