பெரிய வர்த்தக வலயங்கள் நிறுவுவதற்குச் சமாந்தரமாக குடிசைக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் பெருந்துணை புரியும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் மிச் நகர் கிராமத்தில் இன்று குடிசைக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் சுயதொழிலுக்கான உபகரணத் தொகுதி வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரிய கைத்தொழில் பேட்டைகளுக்காக முதலீடு செய்து பல நூற்றுக்கணக்கானோருக்கு தொழில்வாய்ப்பை வழங்குகின்ற அதேவேளை, வறுமைக் கோட்டின் கீழ் உதவிகளின்றி வாழ்ந்து கொண்டிருப்போரில் ஊக்கமுள்ளோரை இனங்கண்டு அவர்களுக்கான சுய தொழில் திட்டங்களுக்கு உதவ வேண்டும் என்பதே தனது நீண்டகால அவா ஆகும்.
அதன் மூலமாகவும் வீட்டினதும், நாட்டினதும் பொருளாதாரம் வளர்ச்சியடையும். வளர்ச்சியடைந்த ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இத்தகைய சமாந்தரமான அபிவிருத்தித் திட்டங்களைக் காணலாம்.
அங்கெல்லாம், அரச தொழில்துறைகளில் நாட்டங் கொள்வோரை விட சுய தொழில்களில் ஆர்வம் காட்டுவோரே அதிகம். அதனாலேயே அந்த நாடுகள் அவற்றின் குடிமக்களும் அபிவிருத்தியை அடைந்து கொண்டுள்ளனர்.
எமது நாட்டிலிருந்து அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குத் வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று தமது குடும்பத்தைப் பிரிந்து அனுபவிக்கும் கஷ்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டே நான் முதலமைச்சராக பதவி வகித்தபொழுது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை தொடக்கி வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.