முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்பதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதா, சபாநாயகர் கரு ஜயசூரியவை நிமிப்பதா? என்பது பற்றிக் கட்சிக்குள் பெரும் குழப்ப நிலை உருவாகியுள்ளதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுப் பொதுத் தேர்தலுக்குத் தலைமை தாங்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அதுவும் கைநழுவும் நிலைக்குச் சென்றிருப்பதால், கட்சியில் சஜித் பிரேமதாச ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுச் செயற்படுமாறு அறிவித்துவிட்டுத் தற்போது சபாநாயகர் கரு ஜயசூரியவை அதன் தலைமைப் பொறுப்புக்கு நியமித்துத் தேர்தலை வழிநடத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்குக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிலை கட்சியில் பலவீனமடைவதாகவும் தகவல்கள் தெரிவத்தன.
பொதுத் தேர்லுக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தலைமைத்துவ இழுபறிக்கு இன்னமும் ஓர் உறுதியான நிலைப்பாடு எடுக்கப் படாததால், கட்சி அங்கத்தவர்கள் அதிருப்தியடைந்து காணப்படுவதாகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியில் சஜித் பிரேமதாசவின் அணியினர் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதே இந்த இழுபறிக்குக் காரணமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டுவரை ரணில் விக்ரமசிங்கவே கட்சியின் தலைமைப்பதவியில் நீடிக்கவுள்ளதால், சஜித் அணியினர் உடனடியான முடிவு எதனையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.
கட்சியின் ஜனநாயகப் பாரம்பரியங்களின்படியும் கட்சி யாப்பின்படியும் ரணில் விக்ரமசிங்கவைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்க முடியாது.
இந்நிலையில், தற்போதைய நெருக்கடியில் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டால், அடுத்த பொதுத் தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பு கைநழுவிப் போய்விடுமோ என்று சஜித் பிரேதமதாச அணியினர் அஞ்சுவதும் தற்போதைய குழப்பத்திற்குக் காரணமென சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும் பொதுத் தேர்லுக்குப் பின்னர் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ஓய்வுபெறப் போவதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்திருப்பதால், அவர் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதில் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடிப்பதே கட்சியின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏனெனில், இந்தப் புதிய நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக கட்சியிலிருந்து பிரிந்து சென்று செயற்படப்போவதாகவும் சஜித் பிரேமதாச அணியினர் எச்சரிக்கை செய்துள்ளமையும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.