ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் அரசாங்கத்திற்கு சாதகமான பகுதிகளை மாத்திரம் தொகுத்து அரச ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தம்மிடம் இருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் இணையத்தளத்தில் வெளியிடுமாறும் அவரிடம் கோரிக்கை விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து குரல் பதிவுகளையும் மக்கள் கேட்கும் வகையில் வெளியிடுவதன் மூலம் மாத்திரமே இந்த தொலைபேசி உரையாடல்களை அரசாங்கமும் மேலும் சில தரப்பினரும் தமக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்வதை நிறுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படி செய்யவில்லை என்றால், ரஞ்சன் ராமநாயக்க பல ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ள குரல் பதிவுகளுக்கு எந்த பெறுமதியும் இல்லாமல் போய்விடும் எனவும் வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னிடம் இருந்த ஒரு லட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிகமாக குரல் பதிவுகள் வேறு தரப்பினரின் கைகளுக்கு எவ்வாறு சென்றது என்பது ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த தரப்பினர் அவற்றை தவறாக பயன்படுத்துவதை அவரால் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.