பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஹெல பொது சவிய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜீனவங்ச தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும்,
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் தேசிய தலைவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கருணா அம்மான் அடையாளப்படுத்தியுள்ளார்.
பிரபாகரன் என்பவர் முப்பது ஆண்டுகள் இலங்கை யுத்தம் ஒன்றை நடத்தி நாட்டு மக்களின் உயிர்களையும் தேசிய வளங்களையும் பெருமளவில் அழித்த நபர்.
யாழ்ப்பாணத்தில் துரையப்பாவின் கொலையுடன் ஆரம்பித்து சிங்கள, முஸ்லிம் தமிழ் மக்கள் உட்பட முழு நாட்டையும் மரண அச்சத்திற்குள் தள்ளினார்.
இலங்கையில் மாத்திரமல்ல உலகில் அங்கீகரிக்கப்பட்ட புத்திசாலியான லக்ஷ்மன் கதிர்காமர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸாநாயக்க, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொன்ற நபர் எப்படி இலங்கையின் தேசிய தலைவராக இருக்க முடியும்.
கருணா அம்மான் போன்ற பயங்கரவாத தலைவர்கள் முதலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையாக வீழ்ச்சியடைய விடுதலைப் புலிகளின் அழுத்தங்களே காரணம்.
தமிழ் இனவாத நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர் புதிய நூற்றாண்டுக்கும் கொண்டு வந்து, மீண்டும் பின்நோக்கி இழுத்து சென்று தமிழ் மக்களையும், நாட்டையும் அழிப்பது தொடர்பில் கருணா அம்மான் உட்பட உயிருடன் இருக்கும் பயங்கரவாத தலைவர்கள் தமது மக்களிடம் மட்டுமல்ல முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி வருகிறார்கள், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க இடமளிக்கின்றனர் போன்ற மூடத்தனமான கருத்துக்களை பரப்பியே தற்போது அரசாங்கம் 69 லட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்டது.
எனினும் தற்போது கடந்த அரசாங்கங்களின் காலத்தை விட சிறப்பாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அவை மக்களுக்கு மூடி மறைக்கப்பட்டது.
இப்படியான நிலைமையில் பிக்குமார், தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொள்னும் சிறிய குழுக்கள் தற்போது ஊமையாக இருப்பது ஏன்?.
கிழக்கு மாகாண பிரதிநிதியான கருணா அம்மானின் இப்படியான கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றனரா?.
தற்போதைய அரசாங்கம் பிரபாகரனை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதா? என்பதை முழு நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் புதுகல ஜீனவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.