ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட தீர்வு திட்டங்கள் மற்றும் சலுகைகளுடன் வடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் தினம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்றும் இம்மாத இறுதிக்குள் அவரின் விஜயம் அமையுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி அரசியல்வாதிகளை மாத்திரமின்றி இளைஞர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் இந்த விஜயத்தின் போது காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், மக்களின் அடிப்படை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, வேலை வாய்ப்புக்கள் என்பவற்றோடு வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுக்கு மேலதிகமாக விசேடமாக வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்புக்களிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கருடனான சந்திப்பில் ‘தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாஷைகளுடன் முரண்பட்டுள்ள போதிலும், காணாமல் போனோரது உறவினர்களின் குடும்பங்களின் நலனுக்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்’ என கோட்டாபய சுட்டிக்காட்டியிருந்ததார்.
இதேவேளை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கோட்டாபய வடக்கிற்கு மேற்கொள்ளவுள்ள முதலாவது விஜயம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.