ராஜபக்சர்களின் கடும்போக்கு அரசுக்கு தமிழர்களின் பிளவுகள் பெரும் பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைவது அவர்களை மேலும் பலப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு அது பாதிப்பையே ஏற்படுத்தும் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் உருவாக்கம், பிளவுகள் தொடர்பில் எமது செய்தியாளாரிடம் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவர் மட்டுமல்ல, ரெலோவின் சிறீகாந்தா என்று பலர் வெளியேறி இருக்கின்றார்கள்.
இந்த வெளியேற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது ஆட்சியிலிருப்பது ராஜபக்சக்களின் கடும் போக்கு அரசு.
தமிழர்களின் ஒற்றுமை குலைக்கப்பட்டால் அந்த அரசுக்கு அது பலமாகும். எங்களின் ஒற்றுமை குலையும் போது பேரினவாத பெரும்பான்மைக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் பலமாக காலூன்ற வசதியாகிவிடும்.
ஆகவே, நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் நானும், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ஒற்றுமை தொடர்பில் அக்கறையாக கதைத்திருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மீண்டும் கூட்டமைப்புக்குள் வருவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவுதான்.
கூட்டமைப்புக்கு மாற்றாக தேர்தலில் போட்டியிடுபவர்களால் கூட்டமைப்புக்கு தாக்கம் ஏற்படத்தான் போகின்றது.
இவ்வாறு மாற்றாகப் போட்டியிடுபவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து தான் செயற்படுவார்கள்.
அவர்கள் எவ்வளவு தூரம் பலமான அணியாக இயங்க போகின்றார்கள், தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எவ்வளவு தீவிரமாக இருப்பார்கள் என்று எல்லாம் சிந்தித்துத்தான் வாக்களிப்பார்கள்.
கூட்டமைப்பு தமிழர்களின் பலம் பொருந்திய கட்சி. அந்த கட்சியின் பலத்தை உடைக்க – சிதற விடக்கூடாது என்பதை தமிழர்கள் கணக்கில் எடுப்பார்கள்.
அதனடிப்படையில் தான் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பார்கள். மக்களின் தீர்ப்பு தான் இறுதியானது. பொறுத்திருந்து பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.