இந்தியாவில் மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓடிப்போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக இருவரும் காவல் நிலையத்துக்கு வந்து பொலிசார் முன்னிலையில் ஆஜரானார்கள்.
குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (48) ஜவுளி தொழிலதிபர். இவரது மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறுவதாக இருந்தது.
இருவீட்டாரும் அடிக்கடி பேசி நெருக்கமாகி உள்ளனர். இதில் மணமகனின் தந்தை ராகேசும், மணமகளின் தாயார் சுவாதியும் (46) ஏற்கனவே நண்பர்களாக இருந்து உள்ளனர். இதனால் இன்னும் அன்பு அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 10ம் திகதி முதல் மணமகனின் தந்தை – மணமகளின் தாயும் அவர்களது வீட்டில் காணவில்லை .
இருவரும் இணைந்து எங்கோ தலைமறைவாகி விட்டார்கள். இதனால் மணமகன் – மணமகள் இரு குடும்பங்களுக்கும் மிகவும் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து இரு குடும்பத்தினரும் பொலிசில் புகார் அளித்த நிலையில் அவர்களின் திருமணம் நின்று போனது.
விசாரணையில் பள்ளி பருவத்தில் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததாகவும் காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது
அப்போது அவர்களின் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் கை கூடாத நிலையில் தற்போது இருவரும் ஓட்டம் பிடித்தது உறுதியானது.
புகாரையடுத்து பொலிசார் ராகேஷ், சுவாதியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இருவரும் காவல் நிலையத்துக்கு வந்து பொலிசார் முன்னிலையில் ஆஜரானார்கள்.
அங்கு சுவாதி கூறுகையில், நான் என் விருப்பத்துடன் தான் ராகேஷுடன் சென்றேன் என்றார். ஆனால் சுவாதியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாது என அவர் கணவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து பெற்றோர் வீட்டுக்கு சுவாதி கிளம்பி சென்றார். ஆனால் ராகேஷ் தனது மனைவி, மகனுடன் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சுவாதியின் கணவரை சமாதானப்படுத்த முயன்றும் எங்களால் முடியவில்லை.
இது போன்ற செயல்களால் குடும்பத்தின் நற்பெயர் கெடும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.