தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு பாரிய நிதிநெருக்கடி இருக்கின்ற நிலையிலும், 1000 ரூபா சம்பள உயர்வை நிச்சயம் வழங்க வேண்டும் என்கிற முடிவிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கம் மிகவும் நிதி நெருக்கடியில்தான் பயணிக்கின்றது. நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவாகினாலும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாடாளுமன்றம் நிதி ஒதுக்கீட்டை திரைசேறிக்கு வழங்கியுள்ளதால் மேலதிக கடன் பெறவும் முடியாது.
நாளாந்த செலவுகளுக்காக மிகவும் குறுகிய நிதியே உள்ளது. 130 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள போதிலும் கடந்த அரசாங்கம் வழங்கவில்லை.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது. இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் விரையில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
அதேபோல, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விவகாரத்தில் தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனை தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அதனை இளைஞர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.


















