மக்கள் செல்வாக்கை அதிகம் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அழிவுப் பாதைக்கே சென்று கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி ஆசையே ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு ரணிலின் பதவி ஆசையை மீண்டும் நிறைவேற்றியுள்ளது. அவரின் ஆதரவாளர்கள் மட்டுமே மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் கட்சியின் தலைமைப் பதவியில் தொடர அனுமதி வழங்கியுள்ளார்கள்.
இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பை மட்டும் அவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளார்கள்.
இந்தத் தீர்மானத்தை சஜித் ஏற்கமாட்டார் என்றே நம்புகின்றோம். எனவே, அவர் தலைமையில் புதிய அரசியல் முன்னணி உருவாக வேண்டும். அந்தப் புதிய முன்னணி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் மாபெரும் வெற்றியைப் பெற முடியும்.
ஐ.தே.கவின் தலைவராக ரணில் இருக்கும் வரைக்கும் அக்கட்சி முன்னோக்கிய பாதையில் செல்லாது. அழிவுப் பாதையிலேயே தொடர்ந்து செல்லும்” – என்றார்.