எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு வழங்க கூடாது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் போட்டி நிறைந்த களமாக அமையவுள்ளது. இவ்வாறான போட்டிக்களத்தில் பலரும் போட்டியிட விருப்பம் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை அதிகப்படியான ஆசனங்களை வடக்கு, கிழக்கில் கைப்பற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையையும், அவர்களது அபிலாசைகளையும் நிறைவேற்றக் கூடிய ஒரேயொரு கட்சியாக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதனை எவரும் மறந்துவிட முடியாது. இந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தினை பிரதிபலிபார்கள் என்பது உண்மை.
அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலமான ஆரோக்கியமிக்க வேட்பாளர்களை களத்தில் இறக்கும்.
அதிக ஆசனங்களை கைப்பற்றுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் தேசியப் பட்டியலில் ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு வழங்காமல் இளைஞர்களுக்கும் கல்வியியலாளர்களுக்கும், மக்களின் வேதனைகளை அறிந்த சமூக சேவகர்களுக்கும், வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.