இன்று கூடவிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை தெரிவித்தார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“கடந்த வாரம் கூடிய இவ்வருடத்துக்கான முதலாவது செயற்குழுக் கூட்டத்தின்போது சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதோடு பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கருத்து முன்னணியின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய செயற்குழுக் கூட்டத்தை சஜித் பிரேமதாசவும் அவரது அணியை சேர்ந்த 33 உறுப்பினர்களும் பகிஷ்கரித்திருந்தனர். எனினும் செயற்குழுவின் தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கின்றனர்.
இந்த அடிப்படையில் இன்று கூடும் ஐ. தே. க செயற்குழுக் கூட்டத்தில் சஜித் அணியினர் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்போது ஐ.தே. மு தலைமைப்பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்திருக்கின்றனர்.
அத்துடன் புதிய பொதுக்கூட்டணி குறித்தும் பேசப்படவுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கூட்டணியின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை அறிவிக்கவும் சஜித் பிரேமதாச தீர்மானித்திருக்கின்றார்.
ஐ. தே.க வின் தலைமைப்பதவியும் செயலாளர் பதவியும் முன்னணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தே இருக்க வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையின் இந்த இரண்டு நியமனங்களையும்இன்றைய செயற்குழு அங்கீகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.