முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுஜன முன்னணியில் இணைத்துக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ரோஹித்த அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாங்கள் இன்னும் தேர்தலுக்கான வேட்புமனுக் குழுவை நியமிக்கவில்லை. யாருடன் இணைந்து போட்டியிடுவது பற்றிய தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
எனினும் என்ன செய்தாலும் பிழை செய்தவர்களைப் பார்த்து பிழை செய்தீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிகளில் இருந்தபோது எடுத்த தீர்மானங்கள் பிழை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் பதவியில் இருந்தார்கள்.
ஆனால் சுதந்திரக் கட்சியினர் என்பது மைத்திரி மாத்திரம் அல்ல. அக்கட்சியின் தலைவராக அவர் உள்ளதோடு மேலும் பலரும் அக்கட்சியில் இருக்கின்றனர்.
எனினும் பிழை என்பதை சுட்டிக்காட்டுவதற்கு எமக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியினரை இணைத்துக்கொண்டு பொதுத் தேர்தலை முகங்கொடுப்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
சில வேளைகளில் அவர்கள் தனியே களமிறங்கலாம். நாங்களும் தனித்துப் போட்டியிடலாம். வேட்புமனுத் தாக்கல் குழு அமைக்கப்பட்ட பின் அதுபற்றி தீர்மானிக்கப்படும்.
சுதந்திரக் கட்சி சில மாவட்டங்களில் அவர்களுடைய வெற்றி சாதகமாக இருந்தால் அங்கு தனித்து போட்டியிடலாம். அதற்கு நாங்களும் அனுமதிப்போம்.
எந்த கட்சியும் வேறு கட்சியுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடலாம். ஆனால் அந்தந்த கட்சியின் அடையாளத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு கட்சித் தலைவரையே சாரும்.
அதேபோல, கூட்டணியில் சம அந்தஸ்துகொண்ட தலைவர் பதவி விவகாரம் வெறும் கட்டுக்கதை என்பதை தெரிவிக்கின்றேன்.
எமக்கு இருப்பது ஒரேயொரு தலைவர்தான். அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ச. பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச எமது வழிகாட்டி” எனவும் கூறியுள்ளார்.


















