தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க நேரமில்லை என்பதுடன் நாளைய தினம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை யானை சின்னத்தில் போட்டியிடுவதில் பிரச்சினையில்லை. கூட்டணிக்கு அந்த சின்னத்தை வழங்க வேண்டும். எது எப்படி இருந்த போதிலும் ஒன்றாக இருப்பதா அல்லது இரண்டு அணிகளாக தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும்.
புதிய கூட்டணியை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளை இணைத்துக்கொள்ள கட்சியின் செயற்குழு சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரத்தை வழங்கியது. அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியினர், யானை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல கால அவகாசம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இந்த காலத்தில் தொடர்பு சாதனங்கள் இருக்கும் நிலையில் அது பெரிய காரியமாக இருக்காது. நாங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன்னரே யானையா, இதயமா எனக் கேட்கின்றனர்.
யானை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டுமாயின், யானை சின்னத்தை புதிய கூட்டணிக்கு வழங்கினால், பிரச்சினை முடிந்து விடும். காலம் கடத்தியது போதும், இந்த வாரம் தீர்மானத்தை எடுக்க வேண்டியது அவசியம். நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் அனுபவங்களை பெற்றோம்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒரு வாரத்தின் பின்னரே எமது ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதனால், நாளைய தினம் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கட்சிக்கும் சஜித் பிரேமதாசவுக்கு கூறி விட்டோம். சஜித் பிரேமதாசவுடன் இந்த பயணத்தை செல்ல வேண்டும் என்று மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர்.அதில் மறைக்க வேண்டியது எதுவுமில்லை என ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.