மட்டக்களப்பு – வாகரைப் பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்குச் செல்லும் போது வாகரைப் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்ததாகவும், அதில் மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்திலிருந்து சென்றவரே விபத்தில் பலியாகியுள்ளதுடன், வாகனம் செலுத்தியவர் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வாகன விபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ.ரபீல் மரணமடைந்துள்ளதுடன், குறித்த விபத்தில் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பழைய கல்முனை வீதி கல்லடியைச் சேர்ந்த கி.லக்மன் (வயது 33) என்பவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். (150)