ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடரில் இலங்கை விவகாரங்கள் குறித்த விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் தரப்பிலிருந்தும், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்தும் முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இழைக்கப்பட்ட விடயங்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்படுமென பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் தரப்பு தொடர்ச்சியாக எதிர்பார்த்திருக்கின்ற நிலையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அத்தீர்மானத்திலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதோடு அமைச்சரவையிலும் தீர்மானத்தினை எடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அறிவிப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 2012 ஆம் ஆண்டு முதல் மிகக்கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி அதன் ஏகோபித்த இணை அனுசரணையுடன் 30.1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்து.
இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியதன் காரணமாக தொடர்ச்சியாக 30.1 தீர்மானத்தினை நீடித்து அதனை நடைமுறைப்படுத்துவற்கான கால அவகாசம் வழங்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறப்போவதாக தீர்மனித்துள்ள நிலையில் ஜெனீவாவுக்கான அரச தூதுக்குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜெனீவா அமர்வில் வெளிப்படுத்தவுள்ளார்.
அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பிலான இலங்கையின் நிலைப்பாடுகளையும் சர்வதேச சமுகத்தின் முன்னாள் வெளிப்படுத்தவுள்ளார்.
இதேவேளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள இலங்கை குறித்த கண்காணிப்பு அறிக்கை தொடர்பிலான பதிலளிப்புக்களையும் செய்யவுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டும் தனது அறிக்கையின் சாரம்சத்தினை அமர்வில் சமர்பணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.