அச்சுவேலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வல்லை -அராலி வீதியின் அச்சுவேலி தென்மூலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து சென்ற நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
பலாலியில் இருந்து அச்சுவேலி நோக்கி வந்த ஹப் வாகனம், அச்சுவேலி பகுதியில் இருந்து பலாலி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளினை மோதியதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய இராணுவ வாகனத்தின் சாரதி அச்சுவேலி போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.