இலங்கை, 2015ம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பிரித்தானிய மற்றும் கனடா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமது, இலங்கையின் தீர்மானம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும் அவர் இலங்கையை வலியுறுத்தினார்.
இதனிடையே இலங்கை எடுத்துள்ள தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் நடவடிக்கையினால் கனடா கடும் ஏமாற்றமடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் குறித்து மேலும் நடவடிக்கை எடுக்க கனடா இலங்கைக்கு அழைப்பு விடுத்ததுடன், வளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு கடந்த 24ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமர்வு இன்று நடைபெற்றது.
இலங்கையின் சார்பில் ஜெனிவா பேரவையில் இன்று உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கையானது 2015ம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட முடியாது, மேலும் மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடு என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, குறிப்பாக அமைச்சரவை அங்கீராம் வழங்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை, முன்னாள் ஜனாதிபதியிடமும் இந்த விடயம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கடந்த அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானம் 40/1 மற்றும் 30/1 மற்றும் 34/1 இல் இருந்து முறையாக விலக நாம் தீர்மானித்துள்ளோம் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டினார்.