அரசாங்கம் செய்ய வேண்டியது ஜெனிவா யோசனையில் இருந்து விலகுவது அல்ல எனவும், போரில் மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் ஏற்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்ற போதிலும் அதற்கு செலவிட்ட பணத்தை தவிர எதுவும் நடக்கவில்லை. காணாமல் போனோர் சம்பந்தமான செயலகமும் காணாமல் போக போகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்றவை காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற முக்கியமான சம்பவங்களுக்காக குரல் கொடுக்க போவதில்லை. இவை எல்லாம் நாடகம்.
போர் காலத்தில் நடந்த அநியாயம், அநீதி, மனித உரிமைக்கு எதிராக செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்கள் சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.



















