முஸ்லிம்களுக்கெதிரான இனவாத அதிகரிப்புக்கு முஸ்லிம் காங்கிரசின் வாய் சுத்தமில்லாமையே காரணமாகும் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் கருத்துச் சுதந்திரம் தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த அரசாங்கம் என்பது பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவால் வந்த அரசாங்கம். ஆகவே முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களும் மிக நிதானமாக தமது வார்த்தைகளை ஊடகம், மற்றும் சமூக வலைத்தளங்களில் பாவிக்க வேண்டும்.
நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக நாம் தான் அடுத்த அரசாங்கத்தை தீர்மானிப்போம், நாங்கள் இல்லாமல் அரசாங்கம் அமைக்க முடியாது என்றெல்லாம் பேசுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
அதே கருத்து சுதந்திரம் ஏனைய மக்களுக்கும் உள்ளது. இவர்கள் எமது அரசை உருவாக்க இவர்கள் யார் என அவர்களும் பேசுகிறார்கள்.
அண்மைய முஸ்லிம்களுக்கெதிரான இனவாத அதிகரிப்புக்கு முஸ்லிம் காங்கிரசின் வாய் சுத்தமில்லாமையே காரணமாகும். என்ன பேசுவது, எதை பகிரங்கமாக பேசுவது என்று தெரியாமல் முஸ்லிம்களை உசுப்பேற்றுவதற்காக பேசி கடைசியில் முஸ்லிம்களை ஆபத்தில் தள்ளி விடுகின்றனர்.
1997ம் ஆண்டுகளில் தீகவாப்பியில் முஸ்லிம்களுக்கான மாற்றுக்காணிகளை வழங்க அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா மு. கா தலைவருக்கு அனுமதி கொடுத்திருந்தார்.
காணிகளை கொடுக்கும் போது அல்லது கொடுத்து விட்டு அதனை ஊடகமயப்படுத்தியிருக்கலாம். அதனை விடுத்து காணி பத்திரங்களை வழங்கும் முன்பே இதனை சாதனையாக கூறி கொழும்பிலும் அம்பாறையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் எதிரொலியாகவே ஜே.வி.பியினர் இக்காணிகள் வழங்கலுக்கெதிராக அம்பாறையில் பிக்குகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடைசியில் சந்திரிக்காவும் இனவாதிகளுக்கு பயந்து காணி பத்திரங்களை ரத்து செய்தார்கள்.
வரலாற்றில் நடந்த தவறுகளில் இருந்து பாடம் படிக்காத சமூகம் வெற்றி பெற முடியாது. நாங்களே அரசை தீர்மானிப்பவர்கள் என்றும் நாங்கள் நினைத்தால் அரசை மாற்றுவோம் என 2002களில் முஸ்லிம் காங்கிரசினர் பேசியதால்த்தான் ஹெல உறுமய கட்சி ஆரம்பிக்கப்பட்டு முஸ்லிம்களால் சிங்கள மக்கள் ஆட்டுவிக்கப்படுவதா என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
இவ்வாறான வரலாற்று தவறுகளை முஸ்லிம் சமூகம் கண்டிக்காமல் அத் தவறுகளுக்கான கட்சிகளை உணர்ச்சி வசப்பட்டு ஆதரிப்பதன் மூலம் முஸ்லிம் பொதுமக்கள் மீதும் பெரும்பான்மைச்சமூகம் ஆத்திரமாக உள்ளது. ஆகவே வீராப்பு பேசுவதை அதற்குரிய இடத்தில்தான் பேச வேண்டும்.
ஒரு கோடி அறுபது இலட்சம் வாக்காளர்கள் கொண்ட நம் நாட்டில் சுமார் 18 இலட்சம் வாக்குகள் கொண்ட நாம் வீராப்பு பேசுவது மேலும், மேலும் நம்மை பாதிப்புக்குள் கொண்டு சேர்க்கும்.
நாம் ஒன்றும் இந்த நாட்டின் அடிமைகள் இல்லை. அதே வேளை நாம் இந்நாட்டு மக்களின் எதிரிகளுமல்ல. நாம் அனைத்து மக்களுக்கும் நண்பர்களாக இருக்க முயல்வோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.