31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவை சேர்ந்த க.நிசோபன் தங்கப்பதக்கத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார்..
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27ம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் இடம்பெற்ற 20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்களுக்கான பிரிவில் 10000 மீற்றர் ஓட்டப்போட்டியில் 10000 மீற்றர் தூரத்தை 35.16.10 நிமிடத்தில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை பெற்று வவுனியா மாவட்டத்துக்கும், வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை 29ம் திகதி இடம்பெற்ற 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கான பிரிவில் 5000 மீற்றர் வேக நடை போட்டியில் 5000 மீற்றர் தூரத்தை 32.21.42 நிமிடத்தில் ஓடி முடித்து வவுனியாவை சேர்ந்த ஜெ.தனுசியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார் .
இதேவேளை வவுனியா மாவட்டமானது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கபடி போட்டியில் 3ம் இடத்தையும், ஆண்களுக்கான உதைபந்து போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.