இளைஞர் சமூகத்துக்கு தொழில் வாய்ப்பு சந்தர்ப்பத்துக்கான வேலைத் திட்டத்தை நோக்கி பயணிப்பதே எமது நோக்கமாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை வேலைத் திட்டம் தற்பொழுது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எந்தவித பிரச்சினையும் இன்றி அதிவேக நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்படும். இந்த பாதையை மட்டக்களப்பு வரையும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் 5 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று வெளியிடப்பட்டது.
2020 தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டு அபிவிருத்தித் திட்ட வெளியீட்டு நிகழ்வு பொலன்னறுவை புளதிஸி பௌத்த மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய இந்த அபிவிருத்தி வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை அங்கு சுட்டிக்காட்டியதுடன், நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒரு திசையில் பயணிப்பது முக்கியமானது என்றும் கூறினார்.
பாராளுமன்றம் காலை பிடித்து இழுக்குமாயின் பிரதமரும் அதே போன்று செயற்படுவாராயின் ஜனாதிபதியினால் முன்னோக்கி பயணிக்க முடியாது.
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒரு புறமும் பிரதமர் மறு புறமுன் செயற்பட்டதை நாம் கண்டுள்ளோம். கடந்த 5 வருட காலப்பகுயில் எந்தவித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கயிறு இழுப்பே கடந்த காலங்களில் இடம்பெற்றது என்று பரதமர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்காக நேர்முகப் பரீட்சைகளை ஆரம்பித்துள்ளோம். பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவித்தி செய்வதற்காக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் 7,000 வீடுகள் மாத்திரமே அமைக்கப்பட்டன. அந்த காலத்தில் ஹம்பாந்தோட்டையில் வீடு ஒன்றை அமைக்கும் பொழுது யாழ்ப்பாணத்தில் அது தொடர்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.