ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நல்ல திட்டங்களை கொண்டு வரும் போது முதலில் அதற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றார்கள் என முன்னாள் பிரதி அமைச்சருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஓன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக சப்பிரிகம வேலைதிட்டம் மற்றும் ஒரு இலச்சம் பேருக்கான வேலைவாய்ப்பு என எந்தவொரு அரசாங்கமும் செய்யாததை எமது ஐனாதிபதி செய்கின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியை மிகவும் விமர்சித்து சிறுபான்மை மக்களுக்கு பயம்காட்டினார்கள்.
இது அவர்களின் காழ்புணர்ச்சியால் தாங்கள் பதவிக்கு வருவதற்காக விமர்சனம் செய்தார்கள். ஆனால் எமது ஜனாதிபதி மிகவும் இயல்பானவர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் சிந்தனையில் மீள்குடியேறிய மக்களுக்கான வீடுகளை விரைவாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வீட்டுத் திட்டம் வழங்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திற்கு என 28 ஆயிரம் கொங்கிறீட் வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி கொடுத்திருந்தாலும் முதல் கட்டமாக 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படுகின்றது.
குறித்த வீடுகள் எமது பகுதிக்கும் தரப்பட வேண்டும் என நான் கோரியிருந்தேன். வடமாகாணத்திற்கு ஒரு வீடு கூட வழங்கப்படவில்லை.
அந்த நேரத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் இங்கு இந்த வீடுகள் பொருத்தமில்லை எனக் கூறி அதனை வழங்கவில்லை.
ஆனால் நான் இது தொடர்பில் அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி பதுளையில் அமைக்கப்பட்டிருந்த கொங்கிறீட் வீடுகளை பார்வையிட்ட பின்னரே இங்கும் இந்த வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.
நாங்கள் மக்களுக்காக இந்த முயற்சிகளை எடுக்கும் போது சில மக்கள் பிரதிநிதிகள் அரசியல் நோக்கத்திற்காக நாம் இந்த வீடுகளை கொண்டு வருவதாக கூறுகிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லை. மக்கள் விருப்பத்துடன் தான் நாம் எந்த செயற்திட்டங்களையும் செய்வோம். மக்களுக்காக தான் அபிவிருத்திகளை இந்த அரசாங்கம் செய்கிறது.
ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கு ஏற்றால் போல் செய்ய முடியாது. இந்த இடத்தில் மக்களுக்காகவே இந்த வீடு நிர்மாணிக்கப்படுகிறது.
இத்தகைய வீடு வன்னி மாவட்டத்திற்கு 50ம், யாழ் மாவட்டத்திற்கு 50 வீடுகளும் முதற்கட்டமாக தந்துள்ளார்கள்.
7000 வீடுகளுக்கு உரிய அனுமதி இருப்பதால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆயிரம் பொருத்தும் வீடுகளை விரைவாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்போம்.
அடுத்து வரவுள்ள 28 ஆயிரம் வீட்டில் வன்னியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3500 வீடுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அத்துடன் அரசாங்கத்தால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள், சப்பிரிகம ஒவ்வொரு கிராமத்திலும் 5 கிலோமீற்றர் வீதி புனரமைப்பு என்பனவும் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் சிந்தனையில் இவ்வாறான நல்ல திட்டங்களை கொண்டு வருகின்ற போது முதலில் அதற்கு எதிரான பொய் பிரச்சாரங்களை சிலர் செய்கிறார்கள்.
கடந்த காலத்தில் எப்படியோ தெரியாது. ஆனால் இந்த அரசாங்கம் மக்களுக்கான நல்ல திட்டங்களையே கொண்டு வருகின்றது. இவ்வாறான அரசின் திட்டங்களை பெற்றுத் தருவதாக கூறினார்.