பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்களை விநியோகிக்கும் திட்டத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரி ஜனாதிபதி கடிதம் எழுதவுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இந்த கடிதம் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தேர்தல் சட்டத்தின்படி அந்த விநியோகத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் அரச நிர்வாகத்தை கொண்டு செல்ல புதியவர்களை சேர்த்துக்கொள்ளும் திட்டத்துக்கு ஏன் தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்தது என்பதை தெரிந்துக்கொள்ளமுடியவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது தெரிவித்தார்.
தேர்தலை மையப்படுத்தி இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அரச நிறுவனங்களுக்கான நியமனங்கள் அத்தியாவசியமானது என்ற வரையறைக்குள் வராதுபோனால் அவ்வாறான தொழில்களுக்கான நியமனங்களை தேர்தல் காலத்தில் வழங்கமுடியாது என்று ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு சுற்றுநிருபம் மூலம் அறிவித்திருந்தது.
பட்டதாரி நியமனங்களுக்காக 70,000 விண்ணப்பத்தாரிகள் விண்ணப்பித்தனர். எனினும் 56 பேரே விண்ணப்பங்களை சரியாக நிரப்பியிருந்தனர். அதில் 45,585 பேரே நியமனங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.