மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் நியமனம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் திடீரென தனது சகோதரனை களமிறக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்பதால் இப்பொழுது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த கட்சியின் வேட்புமனு குழுவின் கூட்டத்திலும் இதனால் குழப்பங்கள் நிகழ்ந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞா.சிறிநேசன், மா.உதயகுமார், நளினி ரட்ணராஜா, சாணக்கியன் ஆகியோர் வேட்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய ஒரு இடத்தில் யோகேஸ்வரனா, துரைராசசிங்கத்தின் சகோதரர் தங்கவேலா என்பதில் குழப்பம்.
சில நாட்களின் முன்னர்வரை, தானும் களமிறங்கப் போவதாக கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்து வந்தார். எனினும், திடீரென அதிலிருந்து பின்வாங்கி, தனது தம்பியை களமிறக்க துரைராசசிங்கம் முடிவு செய்துள்ளார்.
ஏன் திடீரென துரைராசசிங்கம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் என, அவரது தரப்பினரிடமே தமிழ்பக்கம் விசாரித்தது. அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் சில தகவல்களை தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
கி.துரைராசசிங்கம் தேர்தலில் போட்டியிடத்தான் விரும்பியிருந்தார். எனினும், வைத்தியராக பணியாற்றும் அவரது மனைவி அதை விரும்பவில்லை. அவரது விருப்பத்தை மீறி துரைராசசிங்கம் போட்டியிட்டால், அவர் வீட்டை விட்டு சென்றுவிடுவார் என்ற பயத்தில் போட்டியிடவில்லையென நம்முடன் பேசியவர் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டிலும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் துரைராசசிங்கம் களமிறங்க திட்டமிட்டிருந்தார். அப்போதும், அவரது மனைவி அதை எதிர்த்தார். மனைவியின் விருப்பத்தை மீறி, போட்டியிட தயாரானபோது, பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு, அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டார், அவரை காணாமல் திண்டாடிய துரைராசசிங்கம், அடுத்த பஸ்ஸேறி யாழ்ப்பாணம் சென்று அவரை சமரசப்படுத்தி, மீண்டும் அழைத்து வந்ததுடன், தேர்தலில் இருந்தும் விலகிக் கொண்டார் என தெரிவித்தார்.
இதனால் மனைவியின் சொல்லை கேளாமல் தேர்தலில் குதித்து மீண்டும் வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்க அவர் விரும்பவில்லை.
எனினும், தேர்தலில் போட்டியிடுவதென அவர் ஏற்கனவே கட்சிக்கு சொல்லி, ஒரு இடத்தை புக் செய்து வைத்திருந்தார். அந்த இடத்தை “வீணாக்க“ விரும்பாமல், கட்சிக்குள்ளேயே பாவிக்க முடிவெடுத்தே தம்பியை வேட்பாளராக்க முயற்சிக்கிறார்.
தம்பியை வேட்பாளராக்குவதாக அவர் தெரிவித்து விட்ட நிலையில், தற்போது ஏற்பட்ட குழப்பத்தால், அண்ணன் மீது தம்பியும் வருத்தமாக இருப்பதாக தெரிகிறது.
துரைராசசிங்கம் கிழக்கு மாகாணசபை அமைச்சராக இருந்தபோது, தங்கவேல் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியிருந்தார். அதை தவிர வேறெந்த அரசியல் செயற்பாட்டிலும் அவர் ஈடுபட்டதில்லை. தன்னார்வ அமைப்பில் பணியாற்றியபோது, சர்ச்சைக்குரிய சம்பவமொன்றுடன் அவர் பணியிலிருந்து விலகினார்.
தங்கவேல் இந்த தேர்தலில் வெற்றியடைய மாட்டார் என்பது துரைராசசிங்கத்திற்கும், தங்கவேலிற்கும் நன்றாகவே தெரியும். எனினும், இந்த தேர்தலில் போட்டியிட்ட அறிமுகம், அடுத்த மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்ட உதவுமென அவர்கள் கருதுகிறார்கள்.
யோகேஸ்வரன் சில விடயங்களை வெளிப்படையாக பேசுபவர். தீவிர தமிழ் தேசிய நிலைப்பாடு எடுப்பவர்கள் தமிழ் அரசு கட்சியிலிருந்து புறமொதுக்கப்பட்டு வருவது வரலாறு. அந்தப் பட்டியலில் இப்பொழுது சிக்கியிருப்பவர் யோகேஸ்வரன்.
துரைராசசிங்கம் நேற்றைய கூட்டத்தில் யோகேஸ்வரனை புறமொதுக்க வேண்டுமென கூறவில்லை. பெண் வேட்பாளர் நளினியை நீக்கிவிட்டு, தங்கவேலை களமிறக்கலாமென்றார். ஆனால், சுமந்திரன் அதற்கு சம்மதிக்கவில்லை. ஒரு பெண் வேட்பாளர் கட்டாயம், வேண்டுமானால் யோகேஸ்வரனை நீக்கலாமா என்பதை ஆராயுங்கள் என்றார்.
எனினும், கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்கள் இம்முறை போட்டியிடுவதென கட்சியின் மத்தியகுழு முடிவெடுத்துள்ளது. அதனால் யோகேஸ்வரனை விலக்கும் முடிவிற்கு வர முடியாது. அது தர்க்க நியாயமற்றதாகி விடும்.
இதனால், பங்காளிக்கட்சிகளில் ஒன்றின் வேட்பாளரை நிறுத்தி, துரைராசசிங்கத்தின் தம்பியை களமிறக்குவது பற்றியும் ஒரு யோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.