தமிழர்களை வகைதொகையின்றிக் கொலை செய்து, சரணடைந்த எமது உறவுகளைக் காணாமல்போக செய்வதற்குக் காரணமாக இருந்த கோட்டாபாய ராஜபக்சவுக்கு தமிழர் தேசமும் தமிழர்களும் சரியான பதிலைச் சொல்ல வேண்டிய காலம் இது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ‘வல்லதேசத்தின் வலிமை மிகு பெண்களாக’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் நேற்று பசுமைப் பூங்காவில் நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இந்த உலகில் பெண்கள் பலர் நாடுகளின் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால், அந்தப் பெண் தலைவர்களால் எத்தனை பெண்கள் தலைவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஆனால், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டும் பல பெண்களை ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வளர்த்து, தளபதிகளாக – பொறுப்பாளர்களாக உருவாக்கியிருக்கின்றார்.
இப்போதும் இன விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் வகிபாகம் மிக முக்கியமானது. எங்கள் கண்களுக்கு முன்னாலே தாய்மார் ஒப்படைத்த பிள்ளைகளை வெளிக்கொணரப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவர்களில் 16 பேர் தங்கள் பிள்ளைகளைத் தேடியே சாவடைந்திருக்கின்றார்கள். காணி விடுவிப்புப் போராட்டத்திலும் பெண்களே போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால், இதை எல்லாம் மறுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – இந்த இனப்படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர் – மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணமாக இருந்தவர் – அவர் கூறுகின்றார் யாருமே சரணடையவில்லை என்று.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனாதிபதியாகத் தன்னை அடையாளப்படுத்த நினைக்கின்றார் என்றால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
70 ஆண்டுகளுக்கு மேலாக நாம் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குச் சர்வதேசம் ஆதாரம் வைத்திருக்கின்றது.
நாங்கள் பட்ட துன்பங்களுக்கு மஹிந்த ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் பதில் சொல்லியே தீரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.